எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரிகளின் 27-வது தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் 2 நாள் கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எல்ஐசி நிறுவனத்தில் 25 ஆயிரம் வளர்ச்சி அதிகாரிகளும், 11 லட்சம் ஏஜென்ட்டுகளும் உள்ளனர். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்ட போதும் இந்நிறுவனம் சீரான வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார வளர்ச்சி காரணமாக காப்பீட்டு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக, காப்பீடுகளுக்கு அரசு அதிகளவு சேவை வரி விதித்து வருகிறது. அத்துடன் பிசினஸ் இலக்கை எட்டாத காப்பீட்டு வளர்ச்சி அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் மின்னணு காப்பீடுகளை (இ-பாலிசிகள்) அறிமுகப்படுத்தி வருவதால் வளர்ச்சி அதிகாரிகளின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் மத்திய கவுன்சில் கூட்டத்தில் மேற்கண்ட விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற உள்ளது.