கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலியில் 10% உயர்வும், அகவிலைப் படியில் 10% உயர்வும் வழங்கப்படும் என, அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை (கைத்தறி மற்றும் துணிநூல்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் ஆர்.காந்தி 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலியில் 10% உயர்வும் அகவிலைப் படியில் 10% உயர்வும் வழங்கப்படும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் விவரம்:
"தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் அடிப்படைக் கூலி உயர்வு வழங்கப்படாததைக் கருத்தில் கொண்டும், நெசவாளர்களின் வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டும், கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 10% உயர்வும், அகவிலைப் படியில் 10% உயர்வும் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 1 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவர்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.