பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செய்யும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்தபோதிலும், மொட்டையடிக்கும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணம் வசூலித்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டம் பழனி திகழ்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் இன்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பழனி வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
இவர்கள் முடி காணிக்கை செலுத்த இதுவரை ஒரு நபருக்குக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு ரூ.25 வழங்கப்பட்டு வந்தது. இதோடு மட்டுமல்லாமல் மொட்டையடிக்கும் ஊழியர்கள் கூடுதல் தொகையை பக்தர்களிடம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு, ’’கோயில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த இனி கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஊழியர்களுக்கும் பணம் தரத் தேவையில்லை’’ என அறிவித்தார். இந்த அறிவிப்பு இன்று முதல் பழனி உள்ளிட்ட கோயில்களில் நடைமுறைக்கு வந்தது.
பழனி கோயிலில் இன்று பக்தர்கள் கட்டணம் ஏதும் இன்றி முடி காணிக்கை செலுத்த இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. டிக்கெட் வழங்கப்பட்ட பிறகும் மொட்டை அடிக்கும் ஊழியர்கள் 50 ரூபாய் முதல் ரூ.100 வரை வசூல் செய்தது பக்தர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
ஊழியர்களுக்கு ஒரு நபருக்கு மொட்டையடிக்க ரூ.25 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை போதாது என ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்தபோதும், அதற்கான வழிமுறைகளை இன்னமும் வெளியிடவில்லை. இதனால் அறிவிப்பு வரும்வரை கூடுதல் தொகையை பக்தர்களிடம் வசூலிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.