பத்திரப்பதிவு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) வணிகவரி மற்றும் பதிவுத்துறை (முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, பத்திரப்பதிவு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் விவரம்:
"பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக, விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்படும்.
பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பதிவு தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, போலியாகப் பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்படும்.
இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பதிவு தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும். 2021-2022ஆம் நிதியாண்டில் இதற்கான தொடரா செலவினம் ரூ.80 லட்சம் மற்றும் தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.2.20 கோடி ஆகும்".
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.