உதகை பழைய எஸ்.பி. அலுவலகத்தில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை. 
தமிழகம்

கோடநாடு வழக்கு: உதகையில் 36-வது சாட்சியிடம் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

ஆர்.டி.சிவசங்கர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 36-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்ட ஷாஜி என்பவரிடம் 3 மணி நேரத்துக்கு மேல் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த வழக்குக்கு அரசு சார்பில் பிரத்யேகமாக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீஸார் மறு விசாரணையைத் தொடங்கினர்.

அரசு வழக்கறிஞர்கள், வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே, விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனத் தொடர்ந்து கோரிவந்த நிலையில், வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (செப். 03) மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று (செப். 06) காலை உதகை பழைய எஸ்.பி. அலுவலகத்தில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது. வழக்கில் 36-வது சாட்சியாகச் சேர்க்கப்பட்ட ஷாஜி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் என்பவரின் உறவினர்.

எஸ்.பி. ஆசிஷ் ராவத், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சுனிலை போலீஸார் விசாரணைக்கு அழைத்தாகத் தெரிகிறது. ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை.

இது தொடர்பாக, போலீஸார் கூறும்போது, "கோடநாடு வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் 103 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். முக்கியமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 103 சாட்சிகளில் யாரை, எந்நேரம் வேண்டுமானாலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT