சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

அரசு ஆவணங்களில் தாயின் பெயரைக் குறிப்பிடக் கோரிய வழக்கு: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

அரசுத் துறைகளில் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில் தனிப் பிரிவை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில், தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி, கல்வி ஆவணங்கள், இருப்பிடச் சான்று மற்றும் சாதிச் சான்று, வருமானச் சான்று, பூர்வீகச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களில், தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கியுள்ள நிலையில், சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாத, கணவனை இழந்த பெண்கள், செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது தந்தை குறித்த விவரங்களைக் கோர முடியாது என்றும், நாட்டைத் தாய்நாடு மற்றும் மொழியைத் தாய்மொழி, நதியைப் பெண்களின் பெயரில் அழைக்கும் சூழலில், அனைத்து அரசுத் துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள், சான்றிதழ்களில் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில், உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 06) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆறுவார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT