9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாவட்டங்களுக்கு வரும் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குப்பதிவு நேரம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும், வாக்குப்பதிவு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (செப். 06) ஆலோசனை நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நண்பகல் 12 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், திமுக சார்பாக கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், பாஜக சார்பாக கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுக நயினார், சங்கர், தேமுதிக சார்பாக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, வழங்கறிஞர் பாலாஜி உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்தலாம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் திருப்திகரமாக இருந்ததா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து, இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளிடம் மாநில தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மேலும் அவகாசம் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் செப். 03 அன்று மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.