ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாள்; பாமக கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பெரியாரின் பிறந்த நாள் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ், பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

1987-ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காகப் போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பாமக சமூக நீதி நாள் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT