நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. 
தமிழகம்

நீலகிரி மலை ரயில் சேவை: 4 மாதங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது

ஆர்.டி.சிவசங்கர்

கரோனா பரவலால் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை, 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் 4 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 06) முதல் இயக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில், தினசரி காலை 7.10 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிகள் இடையே செல்லும். இதில், பயணம் செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலை ரயில் கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 4 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் தற்போது திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்பட்டு வந்த மலை ரயில், 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இயக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று காலை 7.10 மணிக்கு உதகைக்கு 4 பெட்டிகளோடு சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது.

மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.

இதில், 136 பயணிகளுடன் சென்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர் மலை ரயில் உதகை வந்தடைந்தது. மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT