முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை பக்தர்கள் அறிய, கோயில் வளாகத்தில் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்குமரகுருபரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.அதற்கான கட்டணத்தை அந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு செப்டம்பர் 5-ம் தேதி (நேற்று) முதல் கோயிலுக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்ற விவரத்தை பொதுமக்கள், சேவார்த்திகள் அறியும்வண்ணம் கோயில் வளாகம், முடிகாணிக்கை செலுத்தும் இடம் மற்றும் தேவைப்படும் அனைத்துஇடங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லைஎன்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.