ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். 
தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,875 கனஅடியாக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 22,875 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் மற்றும் தமிழக வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவு தொடர்ந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பிரதான அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

அதேபோல மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 22 ஆயிரத்து 875 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்காக 650 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 69.39 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 71.10 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 33.65 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT