தூத்துக்குடியில் நடைபெற்ற வஉசி 150-வது பிறந்த நாள் விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசினார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி இணைந்திருப்பதில் தவறில்லை: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

செய்திப்பிரிவு

“வரலாற்று அடையாளத்துக்கு நல்லது என்பதால், தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி இருப்பதில் தவறில்லை” என தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற வஉசி 150-வது பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது: தற்போதைய சூழ்நிலையில் தியாகிகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வஉசியின் வீடு எங்கே இருக்கிறது, அவர் இழுத்த செக்கு எங்கே இருக்கிறது, அவர் நடத்திய கப்பல் கம்பெனி எங்கே இருந்தது எனத் தெரியாதவர்கள் கூட தற்போது தேடித், தேடி மரியாதை செலுத்துகிறார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களை மறந்தால் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. 75-வது சுதந்திர தின ஆண்டில் இளைஞர்கள் 75 சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்க வேண்டும். அவர்களது போராட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களுக்கு வணிக ரீதியாக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வஉசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். இதனால் ஆங்கிலேயர்கள் கட்டணமில்லாமல் இலவசமாக கப்பலை இயக்கினர். அந்த இலவசத்தால் தான் வஉசி வீழ்ந்தார். அதுபோல தூத்துக்குடி இலவசங்களால் பல நல்லவர்களை வீழ்த்தியிருக்கிறது.

தியாகிகளை, அவர்களை சார்ந்தவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போதே தேடித், தேடி கொண்டாட வேண்டும். சாதித்தவர்களில் சாதி இல்லை. சாதியினால் சாதித்தவர்கள் இல்லை. தலைவர்களின் பெயரோடு சாதி இணைந்து இருப்பது தான் வரலாற்று அடையாளத்துக்கு நல்லது.

வஉசி பெயர் வைக்க வேண்டும்

வந்தே மாதரம் என்பது மந்திரச் சொல். ஆனால், அந்தச் சொல்லை உச்சரிக்கவே தமிழகத்தில் தயக்கம் இருக்கிறது. ஓட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி இல்லத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் அரசு நூலகம் என்று எழுதப்பட்டுள்ளது. இதனை அரசு வஉசி நூலகம் என மாற்ற வேண்டும் என்று, அப்பகுதி பெண்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுபற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

முன்னதாக ஓட்டப்பிடாரத்தில் வஉசி நினைவு இல்லத்தில் உள்ள வஉசி உருவச்சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வஉசி.யின்வரலாற்றை விளக்கும் புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT