தமிழகம்

130 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர் வ.உ.சி.- பேத்தி பிரமுக்குட்டி பெருமிதம்

செய்திப்பிரிவு

130 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று அவரது பேத்தியும், ஓய்வுபெற்ற ஆசிரியையுமான பிரமுக்குட்டி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடைபெற்றது.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, மாநில துணைதலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.என்.முருகானந்தம், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வ.உ.சிதம்பரனாரின் பேத்தி பிரமுக்குட்டி பேசியதாவது:

எனது தாத்தா வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி இங்கே பலரும் பேசினார்கள். அவரது தியாகங்களை காங்கிரஸ் தலைவர் நினைவுகூர்ந்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வயது 80. நான் அக்காலத்திலேயே பி.ஏ. பட்டம் பெற்றேன். நான் கல்லூரி வரை படித்து பட்டம் பெற்றதற்கு தாத்தா வ.உ.சி.யே காரணம். சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை ஊக்குவித்தவர்.

நான் பி.ஏ. பட்டம் பெற்றதை அறிந்த காமராஜர், எனக்கு ஆசிரியர் பணியை வழங்கினார். இறுதியாக சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். வ.உ.சி. குடும்பத்தினர் எதுவும் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள். நாங்கள் கேட்காமலேயே அரசும், மற்றவர்களும் எங்களுக்கு செய்து வருகிறார்கள். வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காங்கிரஸ் கலைப் பிரிவுத் தலைவர் கே.சந்திரசேகரன் தயாரித்த வ.உ.சி. பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

SCROLL FOR NEXT