பிப்ரவரி 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேமுதிக மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தேமுதிகவின் சார்பில் நடத்தப்பட்ட ஒவ்வொரு மாநாடும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அந்த வரிசையில் வரும் 20-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் வேடல் என்ற இடத்தில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு நடைபெற உள்ளது.
தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி தேமுதிக என்பதை நிரூபிக்கும் வகையில், துணிந்துடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற லட்சியத்தோடு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறிமாறி வருவதுபோல தேமுதிக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும் அதனை சாதனையாக மாற்றி வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயமும், தொழில் துறையும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காஞ்சிபுரம் மாநாடு வரலாற்றில் இடம்பெற தேமுதிக தொண்டர்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அணிதிரள வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.