சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான விவரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராசி மற்றும் வேறொரு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தொடர்ந்த வழக்கில் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்யக்கூடாது என்று இடைக் கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கும்படி அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி கோரினார்.
இதையடுத்து பொதுநலனைக் கருத்தில் கொண்டு 2015-16-ம் ஆண்டு அதிகபட்சமாக 1500 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சில நிபந்தனைகளுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற் காக 31 நிறுவனங்களுடன் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறுவதாக உள்ளது என்றும், அதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரி ராசி கிரீன் எர்த் எனர்ஜி என்ற சூரியசக்தி மின்சார உற்பத்தி நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் போதிய இடம், அனுபவம், உற்பத்தித் திறன், சீனியாரிட்டி போன்ற எந்த தகுதிகளும் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மின்வாரிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து, “எந்த அடிப்படையில் இந்த நிறுவனங் களிடம் இருந்து சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டது என்பதற்கான விவரங்களை மனுவாக உரிய ஆவணங்களுடன் இருவாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதி சுந்தரேஷ் உத்தர விட் டுள்ளார்.