கைது செய்யப்பட்ட சக்தி. 
தமிழகம்

குடும்ப பிரச்சினை தீர பரிகாரம் செய்வதாக பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த போலி சாமியார் விளாத்திகுளத்தில் கைது

செய்திப்பிரிவு

விளாத்திகுளத்தில் குடும்ப பிரச்சினை தீர பரிகாரம் செய்வதாக பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்தி (37). இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ஜோதிட நிலையம் வைத்து, ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

தனது குடும்பப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்ய எண்ணி விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 52 வயது பெண், சக்தியின் ஜோதிட நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டை இடித்து மாற்றியமைத்தால் குடும்பப் பிரச்சினை தீரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையத்து சக்தி, அவரிடமிருந்து 2.5 பவுன் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதை வைத்து அந்தப் பெண்ணும் வீட்டை இடித்துக் கட்டியுள்ளார்.

அதன் பின்னரும் அவரது குடும்பப் பிரச்சினை தீராததால் மீண்டும் சக்தியிடம் சென்று கேட்டிருக்கிறார். அதற்கு தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் 3500 ரூபாயும் கொண்டு வந்தால், அதில் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருவதாக சக்தி தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி தன்னிடமிருந்த நகையை உருக்கி 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், சக்தி இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நகை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது தனக்கு சக்தி கொலைமிரட்டல் விடுத்ததாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, சக்தியை கைது செய்தனர். இது போல் வேறு யாரிடமாவது அவர் மோசடி செய்துள்ளாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT