நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர். இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கரோனாபேரிடர் காலத்திலும் ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது. இத்தகைய ஆசிரியர்களை போற்றும் விதமாகவே மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந் நாளில் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும். மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தரமான கல்வியை பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.
ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியைதிறம்படச் செய்ய வேண்டும். இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: ஆசிரியர், பெற்றோர், மாணவர் என்ற முக்கோண வடிவத்தில் முதன்மையானவர் ஆசிரியர். தாய் போல ஆசிரியரும் தன்னிடம் பாடம் பயிலும் பிள்ளைகளை வேறுபடுத்தி பார்ப்பதில்லை. மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அதன்மூலம் அவர்களின் குறைகள் களையப்பட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சமூகத்தில் சிறந்த குடிமக்களை ஆசிரியர்கள்தான் உருவாக்குகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் அறிவுவளத்தை உருவாக்கும் அற்புதமான பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்புவாய்ந்த இந்நாளில் என்னுடைய ஆசிரியர்களையும் நன்றியுடன் வணங்கு கிறேன்.
இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாய கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.