தமிழகம்

நீதிமன்ற பணியாளர் நியமனம் குறித்து யாரும் அணுக வேண்டாம்: வீட்டில் அறிவிப்பு ஒட்டிய அமைச்சர் ரகுபதி

கே.சுரேஷ்

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தன்னிடம் பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என புதுக்கோட்டையில் உள்ள மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு 3,557 பேரை தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர்.

இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று, அரசு பணியிடத்தை பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையறிந்த அமைச்சர் ரகுபதி, அவர்களிடம், ‘‘இதுபோன்று யாரும் தன்னிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டு வரவேண்டாம், நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்’’ என்று கூறியதாக தெரிகிறது. அத்துடன், புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன்பும் இதுகுறித்து அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘உயர்நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT