மாமல்லபுரத்தில், அர்ஜூனன் தபசு சிற்பம் முன்பு, சுற்றுலா வந்த குடும்பத்தினர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 
தமிழகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் கலைச்சின்னங்கள், கடற்கரைக்குச் செல்ல தடை மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று கலைச்சின்னங்கள் மற்றும் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட கலைச்சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தினத்தில் கடற்கரையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுப்பதற்காக, அன்றையதினம் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சனிக்கிழமையான நேற்று மாமல்லபுரத்தில் கலைச்சின்னங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். எனினும், கலைச்சின்ன வளாகங்களில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT