தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள், இறந்தவர், முகவரி மாறியவர்கள் பெயர்கள் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக் கப்பட உள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 50 லட்சத்துக்கும்மேல் போலி வாக்காளர்கள் இடம் பெற் றிருப்பதாக திமுக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணை யம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக் கப்பட்டது. குற்றச்சாட்டு தொடர் பான ஆதாரங்கள், ஆவணங்கள் வழங்கப்பட்டன. புகார் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது இரட்டைப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த வந்த தலை மைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை சந்தித்து கருத்துகளை கேட்டார். அப்போது திமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கள், பாஜக உட்பட பெரும்பாலான கட்சிகள் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்றும் இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்கி புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க, பிப்ரவரி 15 முதல் 29-ம் தேதி வரை 2 வாரங்கள், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார். அப்போது, திருத்தப் பணிகள் மட்டுமே நடக்கும் என்றும் கூறினார். அதன்படி, இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவுகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் முகாம் நடக்கிறது. சர்ச்சைக்குரிய பெயர்கள் தொடர்பாக வாக்குச்சாவடி அலு வலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துகின்றனர். இறந்தவர்கள் பெயர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த பிறகும் இரட்டைப் பதிவு கள் சம்பந்தப்பட்ட வாக்காளரின் கருத்தை கேட்ட பிறகும் நீக்கப் படுகிறது.
கள ஆய்வு
இப்பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்களுடன் அரசியல் கட்சி களின் முகவர்கள் இணைந்து மேற்கொள்கின்றனர். இதுதவிர ஆன்லைனில் வரும் மனுக்கள் தொடர்பான கள ஆய்வு மற்றும் 18 முதல் 19 வயதுக்குட்பட்டோரை வாக்காளர் பட்டியலில் இணைப்பது தொடர்பான முகாம்களும் நடத் தப்படுகின்றன.