விளாத்திகுளம் அருகே மாவில்பட்டியில் உள்ள மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் மக்காச்சோளம் விதைக்கப்படுகிறது. 
தமிழகம்

பரவலாக மழை பெய்வதால் மானாவாரி நிலங்களில் விதைப்பு பணியை தொடங்கிய தூத்துக்குடி விவசாயிகள்: டி.ஏ.பி. உரம் இருப்பு வைக்க வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பரவலாக பெய்து வரும் மழையை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர். டி.ஏ.பி. உள்ளிட்ட உரம் மற்றும் விதைகளை போதியஅளவு இருப்பு வைக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்துக்காக விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களை உழுதுபண்படுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதன் அறிகுறியாக தற்போது பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதை பயன்படுத்தி விளாத்திகுளம் அருகே மாவில்பட்டி, மாசார்பட்டி, ராசாபட்டி, வீரப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள வறண்ட நிலங்களில் விவசாயிகள் முதல் விதைப்பாக இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் மூலம் மக்காச்சோளம் விதைத்து வருகின்றனர். 2-ம் கட்டமாக உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைச் சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, பருத்தி போன்றவற்றையும், கடைசி கட்டமாக கொத்தமல்லி, சூரியகாந்தி பயிரிடவும் தயாராகி வருகின்றனர். பருவ மழை நன்றாக பெய்தால், நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

இடுபொருள் தாமதம்

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ‘‘கடந்தாண்டு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு, விதைப்பு பணிகளைத் தொடங்கி உள்ளோம். வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் காலம் தாழ்த்தி வழங்கப்படுவதால், அவற்றை பயன்படுத்த முடியவில்லை. தேவைக்கு முன்னதாகவே கொடுத்தால் மட்டுமே முறையாக பயன்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் நிலங்களில் விளைந்த முதிர்ச்சியான கதிர்களை சேகரித்து, வீட்டில் வைத்திருப்போம். அவற்றைஅடுத்து வரும் பருவத்துக்கு விதைகளாக பயன்படுத்தினோம். அவை நாட்டு விதைகளாக இருந்தன. ஆனால், தற்போது அதிக விளைச்சலுக்காக அனைத்தையும் வீரிய ஒட்டுரக விதைகளாக மாற்றிவிட்டதால், அவற்றை அடுத்த பருவத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து உரக்கடைகளில் விதை வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விதைப்பு செய்வதற்கு மட்டும் சட்டி உழவு, ரொட்டவேட்டர், மோல்டு, பல் கலப்பை, அடியுரம் டி.ஏ.பி., விதை உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.7,500 செலவாகிறது. தொடர்ந்து பயிர்கள் முளைத்த பின்னர் மேல் உரமாக பொட்டாஷ், யூரியா, களையெடுப்பு, மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது.பருவத்துக்கு ஏற்ற மழை பெய்தால் மட்டுமே உரிய பலனை விவசாயிகள் எதிர்பார்க்க முடியும்.

உரம் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் டி.ஏ.பி. அடியுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவு இருப்பு இல்லை. அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், இன்னும் 10 நாட்களுக்குள் தேவைக்கு ஏற்ப அடியுரம் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கும் வழங்கப்படும் என கூறுகின்றனர்.

இதனால் உரம் வாங்க அருகே உள்ள மாவட்டங்களுக்கு விவசாயிகள் அலைந்து வருகின்றனர்.

சில தனியார் கடைகளில் தங்களிடம் விதை வாங்குபவர்களுக்கு மட்டும் டி.ஏ.பி. உரம் வழங்குகின்றனர். அதிலும், சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் முறையாக இதனை கண்காணிக்க வேண்டும்.

தேவையான அளவு அடியுரம், டி.ஏ.பி., யூரியாவை இருப்பு வைக்க வேண்டும். விவசாயிகள் விரும்பிய விதைகளை விதைப்பதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT