மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத் தினார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று டெல்லி சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்துக்கான மருத்துவ தேவைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:
தமிழகத்துக்கான மருத்துவ தேவைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் கொடுத்திருக்கிறோம். கரோனா தொற்று பேரிடரில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. அதனால், தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
கோவைக்கு தனியாக எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். 11 புதியஅரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு புதிதாக25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்வேண்டும். செங்கல்பட்டு, குன்னூர்தடுப்பூசி மையத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கேரளா - தமிழகம் எல்லையான 9 மாவட்ட மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டுமென தெரிவித்தோம். அதை ஏற்றுக் கொண்டஅவர், அந்த 9 மாவட்டங்களுக்கான கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதாக தெரிவித்தார்.
அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாஜக ஆட்சி செய்கிற கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு தமிழக அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்தால் நன்றாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குள் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நேற்று டெல்லி திரும்பினார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இருந்த மாரியப்பனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.