தமிழகம்

பதவியில் இருந்தால்தான் மரியாதை: அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கருத்து

செய்திப்பிரிவு

பதவியில் இருந்தால்தான் மரியாதை கிடைக்கிறது என்று அதிமுக முன்னாள் எம்.பி.யான டாக்டர் வி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால், அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது. இளவரசர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கனடா சென்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா சென்ற அவருக்கு, பணம் கொடுத்தால்தான் பாதுகாப்பு தரமுடியும் என்று கூறிவிட்டது அந்நாட்டு அரசு. அங்கு தங்குவதற்கு மனைவியின் குடியுரிமையை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘மாவட்ட ஆட்சியரின் நாய் இறந்துவிட்டால் பெரும் கூட்டம் வந்து விசாரிக்கும். ஆனால், மாவட்ட ஆட்சியரே இறந்துவிட்டால் யாரும் வரமாட்டார்கள்’ என்பார்கள். ‘அவரே போய்விட்டார். துக்கத்துக்கு போனால் என்ன, போகாவிட்டால் என்ன’ என்று இருந்து விடுவார்கள். இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம்.

ஒரு பதவி, பொறுப்பில் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் மரியாதைகளை, தனிப்பட்ட நமக்கு கிடைத்ததாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடையக் கூடாது. அந்த மரியாதை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால், அவை நம்மைவிட்டு போன பிறகும் வருத்தப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்த டாக்டர் வி.மைத்ரேயன், 1999-ல் திமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இணைந்தார். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், 13 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பி.யாக இருந்துள்ளார். எம்.பி. பதவிக் காலம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் அதிமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் தரப்படவில்லை.

இந்நிலையில், ‘பதவியில் இருந்தால்தான் மரியாதை’ என முகநூலில் பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT