தமிழகம்

புதுச்சேரி விமான நிலையம் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் விரைவில் விரிவாக்கம்: அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி விமான நிலையம் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (செப்.3) மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது: பொதுப்பணித்துறை சார்பில் ரூ.538 கோடி மதிப்பில் கட்டிடங்கள், சாலை பணிகள், பாலங்கள் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி நகர மக்களுக்கு பிரெஞ்சு அரசின் உதவியுடன், மத்திய அரசு அனுமதியுடன் ரூ.550 கோடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் இரண்டு ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். கிராமப்புற சாலைகளை நகர்புறத்தில் இணைக்கும் திட்டத்தை சுமார் ரூ.200 கோடி செலவில் இந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படும். மேலும் தடுப்பணைகள் தேவையான இடங்களில் இந்தாண்டு ஏற்படுத்தப்படும்.

15 நாட்களில் சங்கராபரணி ஆற்றில் ஆரியபாளையம் பாலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். அதுமட்டுமின்றி ரூ.70 கோடி செலவில் இந்திரா காந்தி சிலை வரை சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கும்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் தற்போது ரூ.533 கோடியில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு ரூ.1,200 கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான தொகை நபார்டு, ஹட்கோ, ஸ்மார்ட் சிட்டி மூலம் நிதி திரட்டப்படும்.

சட்டத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். நூலக தகவல் உதவியாளர், சட்ட உதவியாளர், உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர், சட்ட உதவியாளர், சார்புச் செயலர், துணைச் செயலர், இணைச் செயலர் ஆகிய கூடுதல் பதவிகளை உருவாக்கி சட்டத்துறை பலப்படுத்தப்படும்.

வழக்கறிஞர் சேமநலநிதி கமிட்டி விரைவில் அமைக்கப்படும். அதற்கான சிறப்ப ஸ்டாம்ப் இம்மாதம் வெளியிடப்படும். மத்திய அரசு அனுமதியளித்துள்ள 7 புதிய நீதிமன்றங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊக்கத்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஊக்கத்தொகை உயர்த்தவும், வருமான உச்ச வரம்பையும் உயரத்த்திட ஆவணம் செய்யப்படும்.

புதுச்சேரி காரைக்காலில் தேவைப்படும் மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க தேவைப்படும் அறிக்கை பெற முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். திருமலைராஜன் ஆற்றில் முகத்துவாரம் ஆழப்படுத்துவதற்கும் மற்றும் டி.ஆர்.பட்டினம் தொகுதியில் சிறிய படகு தங்குதளம் கட்டுவதற்கும்,

மீன்பிடி தடைக்கால நிவாரணம் குடும்பத்துக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பயன்பெறும். மழைக்கால நிவாரணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்படும்.

புதுச்சேரியில் விமான சேவையை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும். சுற்றுலாத் தொழிலை, தொழிற்சாலை என்ற வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் நிதிக்கொடையின் கீழ் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு ஆகியவற்றை ஆன்மீகச் சுற்றலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படச் சுற்றலா மேம்பாட்டுக்காக தனியே ஒரு கொள்கை விளக்கம் வகுக்கப்படும். சுற்றுலாத் தொழிலில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு ஒரு வணிகத் திட்டம் தயாரிக்கப்படும்.’’இவ்வாறு லட்சுமிநாராயணன் பேசினார்.

SCROLL FOR NEXT