பெண்களின் பாதுகாப்பை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உறுதி செய்ய புதுச்சேரியில் புதிய முயற்சி அறிமுகமாகிறது என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் இறுதியில் பேசியதாவது:
"கஞ்சாவைக் கட்டுப்படுத்த 'ஆப்ரேஷன் விடியல்' திட்டத்தில் எடுக்கும் நடவடிக்கையின் கீழ் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 36 கிலோ கஞ்சா பறிமுதலாகியுள்ளது.
ரெட்டியார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தலைமையில் குழுவினர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நக்சல் ஆதிக்கம் பகுதிக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்யும் முக்கிய நபரான கிமுடு ராமராஜுவைக் கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். இப்பணியைப் பாராட்டி வெகுமதி தரப்படும். கஞ்சாவைக் கட்டுப்படுத்த பக்கத்து மாநிலங்களோடு சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் 3 மாதங்களுக்குள் 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன்கள், 29 தொழில்நுட்ப உதவியாளர்கள் என 431 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்கள் அனைத்திலும் சிசிடிவி ரூ.2 கோடியில் பொருத்தப்படும். காவல்துறைக்குத் தேவையான தோட்டாக்கள் ரூ.1 கோடியில் வாங்கப்படும். ரூ.4 கோடியில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் ரோந்துப் பணிக்கு வாங்கப்படும்.
விஐபிக்கள் வரும்போது பாதுகாப்புக்கு ரூ.2.56 கோடியில் ஜாமர் பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் வாங்கப்படும். சைபர் கிரைமை நவீனமயமாக்க ரூ.1.5 கோடியில் தேவையான சாதனங்கள் வாங்கப்படும். சமூக வலைதளங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் உதவி மையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி தந்துள்ளது. புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி அறிமுகமாகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் பெண்களோ, பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்களோ, வெளியூரில் இருந்து வந்துள்ள பெண்களோ தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 112க்குத் தொடர்பு கொள்ளலாம்.
காலதாமதமின்றி ஒரு பெண் காவலரோடு நான்கு சக்கர வாகனத்துடன் சென்று அவர் அளித்த முகவரியில் பாதுகாப்புடன் சேர்ப்பார்கள்".
இவ்வாறு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.