எம்.ஆர்.கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன். 
தமிழகம்

மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்களைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது எப்படி?- உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது எப்படி? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எம்.ஆர்.கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். நிதி நிறுவனம் நடத்த பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கணேசன், சுவாமிநாதன், அகிலாண்டம், வெங்கடேசன் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் உள்ள அகிலாண்டம், வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரர்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக 35க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். முக்கியக் குற்றவாளிகளான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை இன்னும் முடியவில்லை. ஜாமீன் வழங்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

மனுதாரர்களின் வழக்கறிஞர் வாதிடுகையில், "அகிலாண்டத்திற்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளது. வெங்கடேசன் வயது முதிர்ந்தவர். இதைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, "மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர்?, முக்கியக் குற்றவாளிகளான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்?, தற்போது பண மோசடி வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது? என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை செப். 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT