வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ததற்காக திருச்சி மாவட்டம் திருப்பஞ்சீலி ஊராட்சிக்குட்பட்ட டி.ஈச்சம்பட்டி கிராமத்தில் 20க்கும் அதிகமான குடும்பங்கள் ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பஞ்சீலி ஊராட்சிக்குட்பட்டது டி.ஈச்சம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் அதிகமானவர்கள் புகார் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.
புகார் அளிக்க வந்தவர்களில் சவுந்தரராஜன் (67) கூறும்போது, ''டி.ஈச்சம்பட்டி கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தைச் சேர்ந்த நான், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். மேல்நிலைக் கல்வி பயிலும் பேரன்கள் எனக்கு உள்ளனர். ஆனால், திருமணம் செய்த நாள் முதல் என்னையும், என் குடும்பத்தினரையும் ஊரில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளனர்.
இதனால், பல ஆண்டுகளாக ஊரில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நிகழும் சுக துக்க நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றில் நாங்கள் கலந்துகொள்ள முடியவில்லை. எங்கள் வீட்டு சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்பவர்களையும் ஊரில் இருந்து தள்ளிவைத்து விடுவதால் மன வேதனையாக உள்ளது. இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதேபோல், மனு அளிக்க வந்திருந்த தம்பதிகள் பாஸ்கரன்- சீதாலட்சுமி, ரங்கநாதன்- காவியா, கருணாநிதி- அஞ்சலி தேவி, பிரபு- மேனகா ஆகியோர் கூறும்போது, "எங்கள் ஊரில் எங்களைப் போல் கலப்பு மணம் புரிந்த 20க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. கலப்பு மணம் செய்ததற்காக ஊர் முக்கியஸ்தர்கள் எங்களை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். கலப்பு மணம் புரிந்த குடும்பங்களுடன் பேசுவது உட்பட எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஊர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. வழக்கமான நேரங்களிலும் கோயிலில் பிறருடன் இணைந்து வழிபட முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும்போது கடையில் சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. எங்களுடன் எங்கள் பெற்றோர் பேசுவது தெரியவந்தால் அவர்களையும் ஒதுக்கிவைத்து விடுகின்றனர்.
குடிநீர் வசதியோ, அரசின் சலுகைகளோ எங்களுக்கு வழங்குவதில்லை. வீட்டுக்கு வரி ரசீது கேட்டால், ஊரை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர். இந்த மன உளைச்சல் காரணமாக கலப்பு மணம் புரிந்த பலரும் பல ஆண்டுகளாக வெளியூர்களில் சென்று வசித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது ஆட்சியர், ''இது தொடர்பாக விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.