டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி. இவர், மதுரை 6-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனு:
''டெல்லியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சமூக விரோதிகளால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் வீட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகுல்காந்தி தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்தார்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களின் பெயர்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடக்கூடாது என்பது சட்டம். இதை மீறும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை 19.5 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். ராகுல் காந்தி பதிவேற்றம் செய்த சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை கோடிக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் 5000 பேர் ராகுல் காந்தியின் பதிவை தங்கள் ட்விட்டர் கணக்கில் மறு பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் இபிகோ 228 (ஏ), இளம் சிறார்கள் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பிரவீன்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முத்துக்குமார் ஆஜராகினர். பின்னர், ''மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணம் குறித்து இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்தான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.