காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து 48 மணி நேரம் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (செப்.3) தொடங்கியது.
மாவட்டத்தில் அனைவருக்கும் விரைந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட நலவழித்துறை மூலம் அவ்வப்போது சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் செப்.5-ம் தேதி காலை 8 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகிய 13 இடங்களில் இரவு, பகல் என அனைத்து சமயங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
காரைக்கால்மேடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு செய்யும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ், மருத்துவர் ராஜி, செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் கூறுகையில், ''காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 98 ஆயிரத்து 500 பேர் முதல் தவணை தடுப்பூசி, 22 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போடத் தகுதியுடையவர்கள். கடந்த சில நாட்களாக கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம்" என்றார்.