வரும் சட்டபேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது மார்ச் 12-ம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீர்த்தராமன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தருமபுரி வந்திருந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 4,887 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவற்றின் மீதான நேர்காணல் நாளை (இன்று) தொடங்குகிறது. நேர்காணலை முடித்துவிட்டு தமிழகம் முழுக்க கட்சியின் கூட்டங்களுக்கான சுற்றுப் பயணத்தை தொடர உள்ளேன். மார்ச் 12-ம் தேதி சுற்றுப் பயணம் நிறைவடைகிறது.
அதற்கு பிறகு தான் தமிழ் மாநில காங்கிரஸ் வரவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிப்பேன். அதுவரை ஹேஸ்யங்களும், ஆருடங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடந்த போராட்டத்தின் எதிரொலியாக இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிலுவையின்றி காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக முடிக்காமல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பெரும்பாலான பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்லாத நிலை உள்ளது.
அரசு இதில் உள்ள குறைபாடுகளை உடனே நிவர்த்தி செய்து அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கால்வாய், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழை நீரை சேமிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அறிவிப்பு நிலையிலேயே உள்ள ராணுவ ஆராய்ச்சி மையத்தை விரைந்து அமைக்க வேண்டும். பவர் கிரிடு பாதை அமைக்குபோது வெட்டப்பட்ட மரங்களுக்கும், நிலத்திற்கும் உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருப்பது போன்று தருமபுரியில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். காரிமங்கலம் அருகே வண்ணாங்குட்டை மற்றும் சின்னமிட்டஅள்ளி ஏரிகள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன.
இந்த ஏரிகளை தூர்வாரி சீரமைத்து கரைகளில் ஓய்வெடுக்கும் வகையில் பூங்கா உருவாக்க வேண்டும். நெடுஞ்சாலையில் பயணிப்போர் ஓய்வெடுத்துச் செல்ல இந்த பூங்காக்கள் உதவும். தருமபுரி நகரைச் சுற்றி 4 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து அமைத்து தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அரசும், அரசு ஊழியர்களும் தெளிவாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேலை நிறுத்தத்தால் மக்கள் பணிகள் தேக்கமடைவதை இரு தரப்பும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.