தமிழகம்

புதுவாழ்வு திட்டத்துக்கு உலக வங்கி ரூ.900 கோடி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மேலும் 95 வட்டாரங்களில் கிராமப்புற புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த ரூ.900 கோடி நிதியுதவி அளிக்க உலக வங்கி முன்வந்திருப்பதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 385 வட்டாரங்களில், 120 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பில் பன்முக அணுகுமுறையை பயன்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக இந்த திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் மதிப்பீட்டு முறையில் 9 லட்சத்து 80 ஆயிரம் ஏழை குடும்பங்கள் வறுமையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் ஆகியவற்றை இணைத்து 2012-13 முதல் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திலும் இதேபோன்ற அணுகுமுறையுடன் மீதமுள்ள 265 வட்டாரங்களில் இந்த இயக்கம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக 60 வட்டாரங்களில் ஏற்கெனவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளால் மேலும் 95 வட்டாரங்களில் கிராமப்புற புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த ரூ.900 கோடி நிதியுதவி அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT