தமிழகம்

முதல்வரின் தனிப்பிரிவு எடுத்த நடவடிக்கையால் மின்னல் வேகத்தில் பொதுப்பாதை தடுப்புச்சுவரை அகற்றிய அதிகாரிகள்

செய்திப்பிரிவு

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை'யில் நேற்றுமுன்தினம் வெளியான செய்தி எதிரொலியாக, முதல்வரின் தனிப்பிரிவு எடுத்த நடவடிக்கையால் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுப்புச்சுவரை நேற்று அகற்றியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலை அருகில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் எவர்கிரீன் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த மனைப் பிரிவுக்கு செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான 30 அடி தார்சாலையில் ஒரு கும்பல் கடந்த ஜூலை 21 அன்று தடுப்புச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட 115 வீட்டுமனைதாரர்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி பொதுப்பாதையில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் (செப்.1) விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் இந்த தடுப்புச்சுவர் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு முறையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தலின்பேரில், கடலூர் உட்கோட்ட நிர்வாக நடுவரும், வருவாய் கோட்டாட்சியருமான ச.அதியமான் கவியரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இந்த தார்சாலை மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமானது என்றும், ஊராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்தணிக்கையிலும் இந்த சாலை விஜயநகர் மற்றும் எவர்கிரீன் என்ற 2 மனைப் பிரிவுகளுக்கு பொதுவான சாலை என தெரியவந்து உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புச்சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரான எஸ்.ராதிகா, நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் இந்த தடுப்புச்சுவரை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிய மறுநாளே அதிகாரிகள் உடனடி
யாக நடவடிக்கை எடுத்து, ஊராட்சி பொதுப்பாதையை மறித்து கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவரை அகற்றி தந்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு கடந்த ஒன்றரை மாதமாக தீர்வு கிடைக்காமல் தவித்து வந்தோம். வரும் 10-ம் தேதி சில வீடுகளுக்கு புதுமனை புகுவிழா நடைபெற உள்ளநிலையில், தற்போது அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எங்களுக்கான பாதையை மீட்டுக்கொடுத்துள்ளனர்.

இதற்காக மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பண்ருட்டி டிஎஸ்பி, முத்தாண்டிகுப்பம் மற்றும்
காடாம்புலியூர் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், இந்தப் பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT