தமிழகம்

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா(79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜுன் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஆன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் வசிக்கும் அந்த மாணவியின் தாயார் அளித்த பாலியல் புகாரின்பேரில், சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 புகார்களின்பேரில் தனித்தனியாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT