தமிழகம்

மோசடி வழக்கில் கைது செய்ய வேண்டும் என குற்றச்சாட்டு: நடிகர் ஆர்யா காவல் ஆணையருடன் திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் ஆர்யா, சென்னை காவல் ஆணையரை நேற்று பிற்பகல் நேரில் சந்தித்தார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ரூ.70 லட்சம் பெற்று மோசடி செய்ததாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் விட்ஜா, சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி விட்ஜாசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை செய்து பதிலளிக்குமாறு சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் ஆர்யாவிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணிடமும் விடியோ கால் மூலம் விசாரணை செய்தனர்.இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஆர்யா என்ற பெயரில் மாறுவேடத்தில் வேறு ஒரு நபர், அந்த பெண்ணிடம் பேசி பணம் மோசடி செய்திருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

அடுத்தக் கட்டமாக ஆர்யா என்ற பெயரில் விட்ஜாவிடம் பேசி மோசடி செய்ததாக சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் (32), உடந்தையாக இருந்ததாக முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி பையாக் (34) ஆகிய இருவரை கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்களை கைது செய்யவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டபெண் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர்ஆர்யா நேற்று பிற்பகல் 2.35மணி முதல் 2.55 மணிவரை காவல்ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT