சென்னையில் காவல்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த பீர் முகமது காக்கிச் சட்டையிலிருந்து, கரை வேட்டிக்கு மாறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பீர் முகமது.
தமிழக காவல்துறையில் சென் னையில் காவல் உதவி ஆணையராக இருந்தவர் பீர் முகமது. இவர் சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்பி அக்கட்சி தலைமையகத்தில் சில தினங்களுக்கு முன்பு விருப்ப மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அவர் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக அரசிடம் கடிதம் சமர்ப்பித்தார். இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரை பிப்ரவரி 12-ம் தேதி பணியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து, முழுநேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள பீர்முகமது இப்போது அதிமுக கட்சி கரை வேட்டி, வெள்ளை சட்டை சகிதம் திருவல்லிக்கேணி பகுதியில் வலம் வர ஆரம்பித்துவிட்டார்.
திருவல்லிக்கேணி பகுதியில் காவல்துறை ஆய்வாளராகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று போலீஸ் உதவி ஆணையராகவும் நீண்ட நாட்கள் பதவியிலிருந்தவர் பீர் முகமது. கடந்த மாதம் அவர் சென்னை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் உதவி ஆணையராக மாற்றம் செய்யப் பட்டார். வரும் மே மாதம் பணி ஓய்வு பெறவிருந்தார். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வசதியாகவும், சர்ச்சை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் அவர் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக மனு அளித்தார்.
வழக்கமாக விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை மீது அரசு உயரதிகாரிகள் முடிவெடுக்க குறைந்தது 3 மாதங்கள் ஆகுமாம்.
ஆனால், பீர்முகமதுவுக்கு விண்ணப்பித்த சில தினங்களிலேயே விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இப்போது காவல்துறையில் இது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.