தமிழகம்

இலக்கிய திருவிழா பிப்.17-ல் தொடக்கம்: ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை இலக்கிய சங்கம் சார்பில் இலக்கியத் திருவிழா, வரும் பிப்ரவரி 17-ம் தேதி தொடங்குகிறது. இதில் ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் லதா ராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் படிக்கும் பழக்கம் மற்றும் இலக்கிய திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக எங்கள் சங்கம் சார்பில், சென்னை இலக்கிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 3-வது ஆண்டு இலக்கியத் திருவிழா, பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தொடக்கவிழா சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

19-ம் தேதி நிறைவு விழா

ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று விழாவைத் தொடங்கிவைக்கிறார். 18-ம் தேதி லயோலா கல்லூரியில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில் தமிழ் விவாத அரங்கம் நடைபெறுகிறது. 19-ம் தேதி எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நிறைவு விழா நடைபெறுகிறது.

இலக்கிய விருதுகள்

இதில் எழுத்தாளர்கள் பாவண்ணன், மனுஷி ஆகியோருக்கு இந்த ஆண்டின் சிறந்த இலக்கிய படைப்புக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

சங்கத்தின் நிறுவனர் ஒளிவண்ணன்,செயலர் குமாரவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT