கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட போதகர் டேவிட். (இடது ஓரம்) 
தமிழகம்

விநாயகர் சதுர்த்தி விழா: சர்ச்சை துண்டுத்தாள் வெளியிட்டதாக போதகர் கைது

டி.ஜி.ரகுபதி

கோவையில் சர்ச்சைக்குரிய துண்டுத்தாள் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, போதகரை இன்று (செப்.02) காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி. புதூர் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் தலைவராக போதகர் டேவிட் என்பவர் உள்ளார். இவரது பெயரில் வெளியிடப்பட்ட துண்டுத்தாள் கடந்த சில நாட்களாகத் துடியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பரவி வந்தது. அதில், விநாயகர் சதுர்த்தி தினத்துக்கு சிலை வைப்பது தொடர்பான சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு, வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கிறிஸ்தவர்கள் தாங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஜெப யாத்திரை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், துண்டுத்தாளில் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துகள் இடம் பெற்று இருந்தன. இந்த துண்டுத்தாள் விவகாரம், இந்து இயக்கங்களுக்குத் தெரியவந்து, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய துண்டுத்தாளை வெளியிட்ட போதகர் டேவிட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் நேற்று (செப்.01) துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதகர் டேவிட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாரும் அளித்தனர்.

காவல் நிலையத்தில் புகார்

இவ்விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் மு.மணிகண்டன் (25) கோவை துடியலூர் காவல் நிலையத்தில் நேற்று (செப்.01) அளித்த புகாரில், ‘‘நானும், கிராம உதவியாளர் முருகனும் தடாகம் சாலை, கே.என்.ஜி.புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு துண்டுத்தாள் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றது.

அதில், ‘கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு ஜெப யாத்திரை நடந்தது. அதன் வழியாக, கோவை ஆட்சியர் அனுமதி இல்லாமல் யாரும் சிலை வைக்கக்கூடாது, சிலைகளின் அளவு இவ்வளவு உயரம்தான் இருக்க வேண்டும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சிலைகளைக் கரைத்துவிட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இது எல்லாம் இந்த மூன்று ஜெப யாத்திரையின் விளைவுதான்’ எனக் கூறப்பட்டு இருந்தது. அந்த துண்டுத்தாளில் டேவிட், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இரண்டு மதங்களுக்கு இடையே, அசாதாரண சூழலை உருவாக்கி, மதக் கலவரம் ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரம் அச்சடித்து, அதைப் பொதுவழியில் பரப்புகின்ற செயலில் டேவிட் ஈடுபட்டு வந்துள்ளார். சிலை வழிபாடு செய்யும் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும் துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்கு ஊறு விளைவித்து, உட்கருத்துடன் வெவ்வேறு சமய, இன சமூகங்களுக்கு இடையே பகைமை, மோதல் உணர்ச்சிகளை உண்டாக்கும் வகையில், இதுபோன்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட டேவிட் என்பவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.

கைது நடவடிக்கை

இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸார் 153 (ஏ)(1)(ஏ), 504, 505 (2) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இன்று (செப்.02) போதகர் டேவிட்டைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT