பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருக்கும் என்பதால், அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்குத் திமில் இருப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று (செப். 02) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாச்சாரப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும், 2017-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியது.

வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளத் தடையில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT