கிருஷ்ணகிரியில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 12.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனிடையே இரவு 10.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்தது. கனமழையால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் துர்நாற்றம் வீசியதுடன், பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை செயல்பட்டு வருகிறது. மழையால் மைதானம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறித் தண்ணீர் தேங்கி நின்றதால் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி தண்டேகுப்பம் பகுதியில் டைட்டான் நகர் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால், அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. கிருஷ்ணகிரி சுற்றியுள்ள ஏரி, குளம், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரியில் அதிகபட்சம் 125.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. பாரூரில் 22.2, ஓசூர் 10.5, அஞ்செட்டி 3, ஊத்தங்கரை 42.4, தளி 10, பெனுகொண்டாபுரம் 10.2, சூளகிரி 5, நெடுங்கல் 13 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.