தமிழகம்

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; மதுரை பால விபத்தில் நிபுணர் குழு அறிக்கை பெற்று நடவடிக்கை: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரை நாராயணபுரத்தில் நடைபெற்ற பால விபத்து தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் மதிமுக உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் கு.செல்வப்பெருந் தகை ஆகியோர் அரசின் கவனத் துக்கு கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இந்த விபத்துக்கு ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரிய வருகிறது.

விபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் உயிரிழந்தார். பிஹாரைச் சேர்ந்த சுரேஷ்குமார் சிறு காயத்துடன் தப்பினார். விபத்து நடந்ததும் மதுரை மாவட்டஆட்சியர் மற்றும் நிதியமைச்சர் அங்கு ஆய்வு நடத்தினர். பத்திரப்பதிவு அமைச்சர், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், எம்பி சு.வெங்கடேசன் ஆகியோரும் பார்வையிட்டனர். பின்னர் நானும் நிதியமைச்சரும் அங்கு ஆய்வு செய்தோம்.

ஹைட்ராலிக் ஜாக் இயந்திரத்தில் ஆயில் வெளியேறியதால், விபத்து ஏற்பட்டுள்ளது. சாதாரணகூலிப்பணியாளர்கள் தான் இப்பணியை மேற்கொண்டிருந்தனர். பொதுவாக இதுபோன்ற பணியில்ஈடுபடும் போது ஜெய்ப்பூர் நிறுவனம் அங்கு கண்காணித்திருக்க வேண்டும். பொறியாளர்கள் யாரும்அங்கு இல்லை.

விபத்து நடைபெற்றது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. கட்டுமான நிறுவனத்தின் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தேசியநெடுஞ்சாலை ஆணையத்தின் இயக்குநரிடம் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் சிங் குடும்பத்துக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரிய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த குடும்பத்துக்கு நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT