``விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது இடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது தவறானது. விழாவில்இத்தனை பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளை அரசு விதிக்கலாம். ஆனால், முழுமையாக தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இதை பாஜக கடுமையாக எதிர்க்கும். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை உதாரணமாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் கரோனா குறைந்துவிட்டது என்பதால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுஉள்ளன. பள்ளிகளைத் திறக்கநாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அதே நிலையைத்தான் விநாயகர் சதுர்த்தி விழாவிலும் அரசு கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு மறுபரிசீலனை செய்யும் என நம்பிக்கை உள்ளது.
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை சீரமைத்ததை ராகுல் காந்தி குறை கூறியுள்ளார், ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அதை வரவேற்றுள்ளார். அதிமுகவுடன், பாஜக கூட்டணி தொடர்கிறது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.