தமிழகம்

சங்கத் தமிழ் நூல் தொகுப்புக்கு ‘திராவிடக் களஞ்சியம்’ என பெயர் சூட்டுவதை கைவிட வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப் போவதாகவும், அதற்கு 'திராவிடக் களஞ்சியம்' என்று பெயர் சூட்டப் போவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் ‘திராவிட' என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறுஇருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு ‘திராவிடக் களஞ்சியம்' என்று திமுக ஆட்சியில் பெயர் சூட்டுவதில் ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் அண்மைக் காலமாக தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக ‘திராவிட' என்ற வடசொல்லைப் புகுத்தி வருகிறார். தமிழக வளர்ச்சியைக் குறிப்பிடக் கூட அவர் ‘திராவிட மாடல்' என்று பெயர் சூட்டினார்.

ஆனால், சட்டப்பேரவைப் தேர்தல் பரப்புரையில் ‘திராவிடம்', ‘திராவிடர்' ஆகிய சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதல்வராக பதவியேற்றவுடன் ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என்று அறிவித்துக் கொண்டார்.

தமிழர்களிடம் வாக்கு வாங்கும் வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்வது, வாக்கு வாங்கி வெற்றி பெற்ற பின்பு திராவிடத்தைத் திணிப்பது என்ற தந்திரமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. எனவே, சங்கத் தமிழ் தொகுப்பை ‘திராவிடக் களஞ்சியம்' என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT