விநாயகர் சதுர்த்தி விழாவை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், பெரிய விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கக் கோரி, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம், தமிழ்நாடு மண்பாண்டம், விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.படங்கள்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

சிலைகளுடன் திடீர் போராட்டம் எதிரொலி - தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளுடன் சிலர் திடீர் போராட்டம் நடத்தியதால், சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.

கரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக, இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சிலை தயாரிப்பாளர்கள் விநாயகர் சிலைகளுடன் போராட்டம் நடத்தினர்.

தனியார் வாகனங்களில் சிலைகளை எடுத்து வந்து, கலைவாணர் அரங்கம் எதிரே இறங்கி, சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். போலீஸார் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த போராட்டம் நடந்தது. இதுபோல, திடீர் போராட்டங்கள் நடக்கவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் தனியார் வாகனங்களில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

குறிப்பாக கலைவாணர் அரங்கத்தைச் சுற்றியுள்ள அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை,சிவானந்தா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெல்ஸ் சாலை ஆகிய சாலைகளில் அதிகஅளவில் போலீஸார் நிறுத்தப்பட்டு, வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT