குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் 212 பேரை சிறையில் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாளான சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு விசாரணையின்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகளால் கைதிகள் பலர் ஆறுதல் அடைந்துள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கைது உத்தரவுகளை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுக்களின் மீது உயர் நீதிமன்றத்தில் உரிய காலத்தில் விசாரணை நடைபெறுவதில்லை என்று கூறி சிறைக் கைதிகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநரான வழக்கறிஞர் பி.புகழேந்தி பொது நல வழக்கு தொடர்ந்தார்.
காவல் துறையினர் பொய்யான காரணங்களைக் கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தங்களை சிறையில் அடைத்திருப்பதாகவும், இந்த கைது உத்தரவுகளை எதிர்த்து தாங்கள் தாக்கல் செய்யும ஆள்கொணர்வு மனுக்களை உரிய காலத்துக்குள் விசாரித்து உயர் நீதிமன்றம் முடிப்பதில்லை என்றும் கூறி சென்னை புழல் மத்தியச் சிறையில் சுமார் 500 கைதிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது சிறை வளாகத்துக்குள் பெரும் கலவரம் ஏற்பட்டு, சிறைக் காவலர்களால் ஏராளமான கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, கைதிகள் தாக்கல் செய்துள்ள ஆள்கொணர்வு மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி முடிப்பதற்கு வசதியாக நீதிபதிகளின் சிறப்பு அமர்வு ஒன்றை உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று புகழேந்தி தனது மனுவில் கோரியுள்ளார். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வு விடுமுறை நாளான சனிக்கிழமை ஆள் கொணர்வு மனுக்கள் மீது சிறப்பு விசாரணை மேற்கொண்டது. மொத்தம் 543 வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தன. அவற்றில் 157 வழக்குகளில் மனுதாரர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே 55 வழக்குகளில் தடுப்புக் காவலில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவுகள் தவறானவை என அறிவுரைக் கழகம் கூறியிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அந்த 55 பேருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவுகளையும் ரத்து செய்தனர். ஆக, ஒரே நாளல் 212 பேருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தில் விடுமுறை நாளில் நடைபெற்ற இந்த சிறப்பு விசாரணை மற்றும் நீதிபதிகளின் உத்தரவுகளால் நீண்ட நாள்களாக சிறையில் இருந்து வரும் கைதிகள் பலர் ஆறுதல் அடைந்துள்ளனர்.