தமிழகம்

நாகர்கோவில் காசியின் தந்தைக்கு 3-வது முறையாக ஜாமீன் மறுப்பு

கி.மகாராஜன்

பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தையின் ஜாமீன் மனுவை 3-வது முறையாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உள்பட பல பெண்களுடன் நெருக்கமாகப் பழகி ஆபாசப்படம் எடுத்து, இவர் பணம் கேட்டு மிரட்டியதாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். பின்னர் காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு காசியின் தந்தை தங்கபாண்டியனும் (65) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை குமரி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி காசி, அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தது.

இந்த வழக்கில் தங்கபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு 2 முறை மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தங்கபாண்டியன் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ''காசி பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்து தடயங்களை அழித்ததாக என்னை போலீஸார் கைது செய்துள்ளனர். நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு லேப்டாப் மற்றும் செல்போனை இயக்கத் தெரியாது. ஹார்டு டிஸ்க் 26.4.2020-ல் கைப்பற்றப்பட்டது. ஆனால் என்னை 2 மாதங்களுக்குப் பிறகே போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நாகர்கோவில் மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காசி மீதுதான் அனைத்து குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளன. காசியின் தந்தை என்பதைத் தவிர வழக்கில் எனக்கு வேறு எந்தத் தொடர்பும் இல்லை. நான் 395 நாளாகச் சிறையில் உள்ளேன். உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT