விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாயிடம் நட்பு கொண்டிருந்தவரைப் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனிப்படை போலீஸார் இன்று (செப்.1) கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசிக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4, 2 வயதில் 2 மகன்கள் உள்ளனர். வடிவழகனுக்கும், துளசிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வசித்து வந்தனர். துளசி அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த அவருடைய செல்போனை வடிவழகன் பார்த்துள்ளார்.
அதில், 2-வது மகன் பிரதீப்பை (2) தாயே கொடூரமாகத் துளசி தாக்குவது போன்ற வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் துளசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், காவல் ஆய்வாளர் தங்க.குருநாதன், உதவி ஆய்வாளர் ராஜகுமாரி ஆகியோர் சித்தூருக்குச் சென்று துளசியை 2 தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புதுக்கோட்டை மச்சுவாடி பாலன் நகரைச் சேர்ந்த கண்ணையா மகன் பிரேம்குமார் என்ற மணிகண்டன் (31) மீது முகநூல் வழியே நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துளசி தனது கணவர் மீதான வெறுப்பை மகன் மீது காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, பிரேம்குமார் என்ற பெயரில் உள்ள மணிகண்டனின் முகநூல் பதிவுகள், தொடர்பு எண்ணை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்லுசந்து பகுதியில் உறவினர் சாரதா வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனைத் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்து, அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மிட்டாய்க் கடையில் தொழிலாளியாக மணிகண்டன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.