முதல்வர் ஸ்டாலினுடன் எம்.எம்.அப்துல்லா: கோப்புப்படம் 
தமிழகம்

வேட்பு மனு ஏற்பு: திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகிறார்

செய்திப்பிரிவு

திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாவது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் இன்று (செப். 01) வெளியிட்ட அறிவிப்பு:

"முகமது ஜான் (அதிமுக) மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழக சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு, மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர், 2021இல் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குப் பின் திமுகவைச் சார்ந்த முகமது அப்துல்லா வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.

கீழ்க்கண்ட 3 சுயேச்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

1. ந.அக்னி ஸ்ரீராமசந்திரன்

2. கு.பத்மராஜன்

3. கோ.மதிவாணன்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவையடுத்து, காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்நிலையில், எம்.எம்.அப்துல்லாவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால், எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்வாவது உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT