10 ஆண்டுகளாக மூன்று சக்கர சைக்கிள் வேண்டிப் போராடிய மாற்றுத்திறனாளிக்கு 10 நிமிடத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் மோகன். 
தமிழகம்

10 ஆண்டு காலக் கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்: மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி

எஸ்.நீலவண்ணன்

10 ஆண்டுகளாகப் போராடிய மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர், 10 நிமிடத்தில் மூன்று சக்கர சைக்கிளை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் மோகன் இன்று அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்சியர் வளாகப் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், கையில் செருப்பு அணிந்தவாறு மாற்றுத்திறனாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த ஆட்சியர் மோகன், உடனே காரில் இருந்து கீழே இறங்கி அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மாற்றுத்திறனாளி நெற்குணத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர் ஆட்சியரிடம் கூறுகையில், ''பிறந்து 8 மாதத்தில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. தற்போது துணி தைக்கும் வேலை செய்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய மூன்று சக்கர சைக்கிள் உடைந்து, சேதமாகிவிட்டது. இதனால், புதிய சைக்கிள் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று முனியப்பன் தெரிவித்தார்.

உடனே, மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தொடர்புகொண்ட ஆட்சியர், சம்பவ இடத்திற்கு மூன்று சக்கர சைக்கிளை வரவழைத்து அவருக்கு வழங்கினார். 10 ஆண்டு காலக் கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியருக்கு, முனியப்பன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT