தமிழகம்

பஞ்சரைத் தடுப்பதே நோக்கம்: சாலையோரத்தில் இரும்புத் துண்டுக் கழிவுகளைச் சேகரித்து வாழ்க்கையை நகர்த்தும் முதியவர்

என். சன்னாசி

சாலையோரங்களில் வாகன டயர்களைப் பஞ்சராக்கும் இரும்புத் துண்டுகளை 35 ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் முதியவர் ஒருவர் வாழ்க்கை நடத்துகிறார்.

பொய், களவு, ஏமாற்றுதல் ஆகியவற்றைத் தவிர்த்து உடல் வலிமை இருந்தால் எந்த வேலையையும் செய்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழலாம் என்பதற்கு உதாரணமாக மதுரையில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். 60 வயது முதியவரான கோபால் என்பவர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையோரங்களில் கிடக்கும் இரும்புத் துண்டு, காந்தத் துகள்கள் உள்ளிட்ட கழிவுகளைச் சேகரித்து, அவற்றை விற்றுச் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறார்.

மேலும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது சகோதரர் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட செலவிற்கும் கொடுத்து உதவுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"எனது சொந்த ஊர் கேரளா. பிழைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை கல்மேடு பகுதிக்கு வந்தோம். 2014-ல் மனைவி இறந்த நிலையில், பிள்ளைகள் கேரளாவுக்குத் திரும்பிவிட்டனர். தற்போது, கல்மேட்டில் தம்பியின் வீட்டில் இருக்கிறேன். மதுரைக்கு வருவதற்கு முன்பிருந்தே கடந்த 35 ஆண்டுகளாக சாலையோரங்களில் கிடக்கும் இரும்புக் கழிவுத் துண்டுகள், பழைய ஆணிகள், காந்தத் துகள்களைச் சேகரித்து வருகிறேன்.

இதற்காக மரக்கட்டை ஒன்றில் காந்தம் பொருத்தி, தரையில் உரசும்போது, இரும்பு, காந்தக் கழிவுகளைக் கவ்விப் பிடிக்கும் வகையிலான கருவி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளேன். இதனால் இரும்பு, காந்தத் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அவற்றைச் சல்லடை மூலம் பிரித்தெடுப்பேன். தினமும் 30 கிலோவுக்கு மேல் இரும்புத் துண்டுக் கழிவுகளைச் சேகரிப்பேன். ஒரு கிலோ ரூ.27க்கு என பழைய இரும்புக்கடையில் விற்பேன்.

நாள் ஒன்றிற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிப்பேன். இதற்காக 50 கிலோ மீட்டருக்கு மேல் சாலையோரங்களில் நடந்து செல்வேன். கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, சாலையோர இரும்புத் துண்டுகளைச் சேகரித்துள்ளேன்.

இது எனக்கான வாழ்வாதாரம் என்றாலும், குறிப்பாக சாலைகளில் கிடக்கும் இரும்புக் கழிவு, ஆணிகள், கம்பிகளால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி பதம் பார்ப்பதைத் தடுப்பதே எனது முக்கிய நோக்கம். எனது வருவாய் எனக்குப் போதுமானதாக இருக்கும். மேலும், எனது தம்பி மகன்களின் கல்வி உள்ளிட்ட செலவுக்கும் கொடுப்பேன்.

யாரிடமும் கையேந்தாமல், பிச்சை எடுக்காமல் உழைத்துப் பிழைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இத்தொழிலைத் தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்கிறேன். உடலில் தெம்பு இருக்கும் வரை செய்வேன்".

இவ்வாறு கோபால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT