தமிழகம்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை: நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்இணைப்பு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் போது, அந்த வீட்டுக்கானகட்டிட வரைபட அனுமதியை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ளநகராட்சி, மாகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும்.

அவ்வாறு அனுமதி வாங்கியபிறகு, சிலர் ஒப்புதல் பெறும், வரைபட அனுமதியில் குறிப்பிட்டுள்ள அடிகளை விட கூடுதலாக கட்டுகின்றனர். இந்த விதிமீறலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்தால் அதற்கு அபராதம் விதிக்கின்றனர். கட்டிட உரிமையாளர்களும் அபராதத்தைக் கட்டி, தொடர்ந்து அந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அந்தக் கட்டிடத்துக்கு மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இவ்வாறு விதி மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக நுகர்வோர் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயரம் உள்ள கட்டிடங்களுக்கு மின்இணைப்பு கொடுக்கக் கூடாது. மேலும், கட்டிடத்துக்கு மாநகராட்சி, நகராட்சியிடம் இருந்துகட்டிடப் பணி முடிப்பு சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக மின்இணைப்பு கிடைக்காமல் இருக்கின்றன.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான்.இன்றைக்கு பலர் வங்கிகளில் கடன்வாங்கித்தான் வீடு கட்டுகின்றனர். சொந்த வீட்டில் குடியேறினால், வாடகை மிச்சமாவதோடு, அத்தொகையை மாதம்தோறும் வங்கிக்கடன் செலுத்த உதவியாக இருக்கும். ஆனால், மின்இணைப்பு கிடைக்காததால் புதிய வீட்டில் குடியேற முடியாத நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு மின்இணைப்பு கொடுக்காததால், மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிடங்கள் மற்றும்மனைப் பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்படுவது போல, இந்தக் கட்டிடங்களையும் வரன்முறைப்படுத்தப்பட்டு மின்இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கும்போது கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற தமிழ்நாடுஒருங்கிணைந்த கட்டிட விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம்மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மின்வாரியம் தலையிட முடியாது’’ என்றனர்.

நீதிமன்றமும், அரசும் பலமுறை எச்சரித்தும் கூட தெரிந்தோ, தெரியாமலோ விதிகளை மீறி பலர் இவ்வாறு கட்டிடங்களை கட்டி வருகின்றனர். தற்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இவ்வாறு மின்இணைப்பு பெற முடியாமல் இருக்கும் சூழலில், இதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு அரசு கொண்டு செல்ல வேண்டும்.

நீதிமன்றத்தின் அனுமதியோடு இறுதியாக ஒருமுறை மட்டும் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்து மின்இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT